பெயின் கில்லர் எனப்படும் வலி நிவாரணி மாத்திரைகள் தற்காலிக நிவாரணத்தை தருபவையாக உள்ளன. இந்த வலி நிவாரணி மாத்திரைகளை தொடர்ந்து பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியத்திற்கு எதிர் விளைவுகளை ஏற்படுத்தும்.
உடலில் வலி ஏற்படும் போது உங்களுக்கு கண்டிப்பாக வலி நிவாரண மாத்திரை தேவையா என்பதை முடிவு செய்ய வேண்டும். உங்களால் சில நாட்கள் வலியை பொறுத்துக் கொள்ள முடியும் என்றால் வலி நிவாரண மாத்திரை தேவையில்லை.
வலி நிவாரணி மாத்திரைகளைப் பயன்படுத்தி தற்காலிக நிவாரணம் பெறுவதை விட சரியான நிபுணரிடம் சென்று அதற்கேற்ற சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் வலி நிரந்தரமாக உங்களை விட்டு போகும்.
மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் மருந்து கடைகளில் மருந்தை வாங்கி பயன்படுத்துவதை தவிர்ப்பது நலம். இது ஒரு ஆபத்தான பழக்கம். மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் வலி மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் போது, அது இறப்பிற்கும் வழிவகுக்கலாம்.
வலி மாத்திரைகளை அதிகம் எடுத்துக்கொள்வதால் செரிமானக் கோளாறு, மலச்சிக்கல் , மயக்கம், சோர்வு, குறைந்த இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற நோய்கள் உருவாகும். மேலும் கல்லீரல், இதயம் போன்றவை வலிமை இழக்கின்றன. எனவே மருத்துவர்களின் பரிந்துரைப்படி சரியான அளவு எடுத்துக்கொள்வது நல்லது.