ஊர் -திருப்பாடகம்
மாவட்டம் -காஞ்சிபுரம்
மாநிலம் -தமிழ்நாடு
மூலவர் -பாண்டவ தூதர்
தாயார் -சத்யபாமா, ருக்மணி
தீர்த்தம் – மத்ஸ்ய தீர்த்தம்
சிறப்பு திருவிழாக்கள்: வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி, முக்கோட்டி ஏகாதசி, பங்குனி உத்திரம்.
திறக்கும் நேரம்: காலை 7:00 மணி முதல் 11:00மணி வரை, மாலை 4:00மணி முதல் இரவு 7:30மணி வரை.
தல வரலாறு
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 49 வது திவ்ய தேசம். கிருஷ்ணா அவதாரத்தில் பாண்டவர்களுக்கு மிகப்பெரிய பலமாக இருந்த கிருஷ்ணரை அவமானப்படுத்த நினைத்தான் துரியோதனன்.
எனவே கிருஷ்ணர் தூது சென்றபோது, அவருக்கான இருக்கையில் பெரிய நிலவறையை உண்டாக்கி, அதன் மீது பசுந்தழைகளை வைத்து மறைத்தனர். கிருஷ்ணரும் வந்து அமர்ந்தார் நிலவறை சரிந்து உள்ளே விழுந்தது. கிருஷ்ணரைத் தாக்க வந்த மல்லர்களை அழித்து விஸ்வரூப தரிசனம் காட்டினார்.
யுத்தம் முடிந்த காலத்திற்குப் பிறகு ஜனமேஜயர் என்ற மன்னன் ஒரு ரிஷியிடம் பாரதக் கதையை கேட்டு, நிலவறையில் அமர்ந்த கோலத்தில் உள்ள விஸ்வரூப தரிசனத்தை தானும் காண வேண்டும் என, இத்தல தீர்த்தத்தில் அமர்ந்து தவம் புரிந்தார் ஜனமேஜயர். மன்னனுக்காக பெருமாள் தன் பாரத கால தூது கோலத்தை காட்சி கொடுத்தார்.
தக்கனின் மகளான ரோகிணி, கிருஷ்ண பகவானை வழிபட்டு சந்திரனை அடையும் வரம் பெற்றார். சந்திரன் தனது 27 நட்சத்திர தேவியர்களில் முதலில் ஞான சக்திகளை கொண்ட ரோகிணியையும், அக்னி சக்திகளை கொண்ட கார்த்திகையையும், மணந்த பிறகு மற்ற நட்சத்திர தேவியர்களை மணந்தார்.
கிருஷ்ணர் இவ்விடத்தில் ரோகிணிக்கு விஸ்வரூப தரிசனம் கொடுத்துள்ளார். ஆகவே இவ்வூரில் ரோகிணி சூட்சும வடிவில் தினமும் வழிபாடு செய்வதாக ஐதீகம். இத்தலத்தில் அங்கப்பிரதட்சணம் செய்பவர்களின் சோதனைகளும், துன்பங்களும் விலகும் எனவும், புதன், சனி, ரோகிணி, அஷ்டமி திதி, எட்டாம் தேதிகளில் இங்கு வழிபடுவது சிறப்பு என சொல்லப்படுகிறது.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இத்தல பெருமாளை தரிசித்தால் வாழ்வில் மேன்மை உண்டாகும். இத்தலத்தில் 25 அடி உயரத்தில் அமர்ந்த நிலையில், மூலஸ்தானத்தில் காட்சி அளிப்பது வேறு எங்கும் காண முடியாத சிறப்பு.