கொரோனாவை தொடர்ந்து தற்போது பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கொல பட்டினி. இதுல police அடி வேற தாங்கிக்கணுமா? என்று கவுண்டமணி கூறுவது போல் தற்போது நிலைமை மாறிவிட்டது.
பறவைகளில் காணப்படும் H5 N1 என்ற வைரஸ் தொற்றை பறவை காய்ச்சல் என்று குறிப்பிடப்படுகிறது. இது மனிதர்களையும் விலங்குகளையும் பாதிக்கக் கூடியது என்பதால் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
ஏற்கனவே கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மோசமான பாதிப்பை உருவாக்கியது. இந்நிலையில் புதிய பிரச்சனையாக பறவைக்காய்ச்சல் உருவாகியுள்ளது. இது ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாசலப் பிரதேசம் மற்றும் கேரளாவில் உருவெடுத்துள்ளது.
பறவைக் காய்ச்சல் தொற்று இருந்தால் காய்ச்சல் 38 டிகிரி செல்சியஸ் இருக்கலாம். தொடர்ச்சியாக இருமல், வயிற்றுப் போக்கு இருக்கும். சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம்.
தலைவலி, தசைவலி, உடல்நலக் குறைவு, உடல் சோர்வு, சளி ஒழுகுவது, தொண்டை வலி, தொண்டை புண் ஆகியவை ஏற்படலாம். இந்த அறிகுறிகள் இல்லாமல் ஒரு கண்ணில் மட்டும் தொற்று உண்டாகும் வாய்ப்பு உள்ளது.
பறவை காய்ச்சலில் பல வகைகள் இருந்தாலும் மனிதர்களை பாதிக்கும் பறவைக்காய்ச்சல் H5 N1 ஆகும். இது ஹாங்காங்கில் 1997 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது.
பறவைகள் மற்றும் பறவை முட்டைகள் விற்பனை செய்யும் திறந்த வெளியிடங்கள், திடக் கழிவுகள் காற்றில் கலக்கிறது. அதை மனிதர்கள் சுவாசிக்கும்போது தொற்று ஏற்படுகிறது.
இந்தத் தொற்று பாதிக்கப்பட்ட பறவைகளை தொடுவதன் மூலமும் அதன் இறைச்சிகளை சாப்பிடுவதன் மூலமும் இது பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட பறவைகளின் மலம் மற்றும் எச்சியில் இந்த வைரஸ் பத்து நாட்கள் வரை வெளிவரும். அது விழும் இடத்தை தொடுவதன் மூலம் தொற்று எளிதாக பரவுகிறது. அந்த இடத்தில் இருப்பவர்களுக்கு இந்த H5 N1 வைரஸ் தொற்று வருவதற்கான அபாயம் உண்டு.
மூக்கு மற்றும் தொண்டையில் இருந்து எடுக்கப்படும் திரவ மாதிரிகள் வைரஸை கண்டறிய உதவுகிறது. நுரையீரலின் ஆரோக்கியத்தை பரிசோதிக்க மார்பக எக்ஸ்ரே செய்யப்படுகிறது.
கோழி பண்ணையாளர்கள் சுகாதாரத்தை கடைப்பிடிப்பதன் மூலம் தொற்று நேராமல் தடுக்கலாம். அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுவது அவசியம். இறைச்சி மற்றும் முட்டைகளை நன்றாக கழுவி நன்றாக வேக வைத்து சாப்பிட வேண்டும்.
கோழிப்பண்ணை வைத்திருப்பவர்கள், இறைச்சி கடை வைத்திருப்பவர்கள். பறவைகளோடு தொடர்பு கொண்டிருப்பவர்கள் எச்சரிக்கையோடு இருப்பது நல்லது.