குழந்தையை தள்ளிப்போட சொல்லும் வாழ்க்கை துணையா..? மாற்றுவதற்கு சில டிப்ஸ்..!

இன்றைய காலகட்டத்தில், சரியான நேரத்தில் திருமணம் செய்துக் கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை குறைந்துக் கொண்டே வருகிறது. ஒரு சிலர் திருமணம் செய்துக் கொண்டாலும், குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப்போடுகின்றனர். இது தம்பதியினர் இரண்டு பேருக்கும் சம்மதமாக இருக்குமானால், வாழ்க்கையில் பிரச்சனை எதுவும் ஏற்படாது. ஒருவருக்கு மட்டும் தான், குழந்தையை தள்ளிப்போடுவதில் விருப்பம் இருக்குமாயின், பல்வேறு சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, உங்கள் துணையை மாற்றுவதற்கு சில வழிமுறைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும். அதற்கான டிப்ஸ்களை பின்வருமாறு பார்க்கலாம்.

டிப்ஸ்கள்:

  1. வெளிப்படையான பேச்சு
  2. அழுத்தத்தை உதறி தள்ளுங்கள்
  3. ஆலோசகரின் உதவியை நாடுவது

வெளிப்படையான பேச்சு:

தம்பதிகள் தங்களுக்குள் கலந்து நன்றாக பேசுங்கள். குழந்தை வேண்டும் என்று கூறும் நபர், உங்களது எதிர்பார்ப்பு என்னவென்பதை உங்களது துணையிடம் எடுத்து சொல்லுங்கள். மேலும், உங்களது துணை குழந்தையை ஏன் தள்ளிப்போட சொல்கிறார் என்பதற்கான காரணங்களை ஆராய்ந்து, அதனை நாம் எப்படி அந்த பிரச்சனைகளை சரி செய்ய முடியும் என்று கூறுங்கள். மேலும், இரண்டு தரப்பிலும், நன்கு ஆராய்ந்து, எது சரியான முடிவு என்பதை தேர்ந்தெடுங்கள். மேலும், குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பம் கொள்ளும் நபர்கள், அதனால் ஏற்படும் நன்மைகளை துணையிடம் விரிவாக பேசுங்கள்.

அழுத்தத்தை உதறி தள்ளுங்கள்:

திருமணமாகி நீண்ட நாட்களாகியும், ஏன் இன்னும் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என்று உறவினர்கள் கேட்பார்ளே என்ற காரணத்திற்காக, குழந்தை பெற்றுக் கொள்ளாதீர்கள். அப்படி ஒரு காரணம் தான் உங்களை குழந்தை பெற்றுக் கொள்ள வைக்கிறது என்றால், அது தவறான விஷயம். உங்களது எதிர்கால திட்டங்களை பொறுத்து தான் நீங்களும், உங்களது துணையும் எதையும் முடிவு செய்ய முடியும். எனவே, அப்படி ஒரு அழுத்தம் இருந்தால், அதற்காக, உங்கள் துணையிடம் குழந்தை பெற்றுக் கொள்ளுதல் பற்றி வற்புறுத்த வேண்டாம். அது தேவையற்ற பிரச்சனைகளை வாழ்க்கையில் ஏற்படுத்தும். மேலும், மற்றவர்கள் சொல்லும் வார்த்தைகளை நீங்கள் காதில் வாங்க வேண்டிய அவசியமும் இல்லை.

ஆலோசகரின் உதவியை நாடுவது:

தம்பதியரில் ஆண், பெண் இருவருமே பாலியல் ரீதியாக விரும்பத்தகாத நிகழ்வுகளை தங்கள் வாழக்கையில் சந்தித்திருக்க கூடும். அதை வெளிப்படையாக சொல்ல முடியாமல் குழந்தை இப்போது வேண்டாம் என்ற காரணத்தையே முன் வைத்து இல்லற வாழ்வை தவிர்க்கலாம். இந்த சூழலில் ஒரு தொழில்முறை ஆலோசகரின் உதவி உங்கள் துணைக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கலை அடையாளம் கண்டு தீர்க்க உதவும்.

குழந்தை பெற்றுக் கொள்ளுதல் முக்கியமான விஷயமாக இருந்தாலும், அது தம்பதிகள் இரண்டு பேரின் ஒருமித்த முடிவாக இருக்க வேண்டும். எனவே, ஒன்றாக அமர்ந்து நன்கு ஆலோசித்துவிட்டு ஒரு முடிவை எடுங்கள். அதை தவிர்த்துவிட்டு, தங்களது துணைக்கு தெரியாமல் கருத்தடை சாதனங்களை பயன்படுத்துவது, மருந்துகளை உண்பது என்று இருக்க வேண்டாம். இது தேவையற்ற பிரச்சனைகளை உடலுக்கும், வாழ்க்கையிலும் ஏற்படுத்தும்.

Recent Post

RELATED POST