தமிழ் மாதங்களில் புண்ணியம் தரும் மாதங்களில் ஒன்று புரட்டாசி மாதம். இது பெருமாள் வழிபாட்டிற்கு உகந்த மாதம் என்று சொல்லப்படுகிறது. இந்த மாதத்தில் பெரும்பாலான இந்துக்கள் இறைச்சி உண்பதை தவிர்த்து விடுவர்.
திருப்பதி வெங்கடாசலபதிப் பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் வணங்குவது பெரும் புண்ணியம். திருப்பதிக்கு நேரில் சென்று வணங்க முடியாதவர்கள் வீட்டில் வெங்கடாசலபதி திருவுருப் படத்தை வைத்தும் வணங்கலாம்.
Also Read : புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது? உண்மையான காரணம் இதுதான்..!
சனிக்கிழமைகளில் விரதம் இருப்பது சிறப்பென்றாலும், அதிலும் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது கூடுதல் சிறப்பு.
புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை.
புரட்டாசி சனிக்கிழமைகளில் யாருக்கும் கடன் கொடுக்கவும் கூடாது. கடன் வாங்கவும் கூடாது. ஆனால் தர்மம் நிறையச் செய்யலாம்.
புரட்டாசி மாதத்தில் அனைத்து நாட்களும் விரதம் இருந்து, பெருமாளை வழிபட ஏற்ற நாட்கள் என்றாலும், புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் பல மடங்கு அதிக பலன்களை நமக்கு தரக் கூடியவையாகும்.
புரட்டாசி மாதமும் முழுவதிலும் விரதம் இருந்து, பெருமாளை வழிபட முடியாதவர்களும் கூட, புரட்டாசி சனிக்கிழமைகளில் மட்டும் விரதம் இருந்தால், புரட்டாசி முழுவதும் விரதம் இருந்து வழிபட்ட பலனை பெற்று விட முடியும்.
புரட்டாசி மாதம் பெருமாளுக்குரிய மாதம் என்பதால் வைணவ தலங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவு காணப்படும். உலகப்புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் ,திருச்சி ஸ்ரீரங்கநாதர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் உள்பட பல கோயில்களில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடைபெறுவது வழக்கம்.