குழந்தை வரம் தரும் புத்திர காமேஸ்வரர் கோவில் வரலாறு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பட்டு புகழ்பெற்றது. அதே போல் இந்த புத்திர காமேஸ்வரர் கோவில் புகழ்பெற்றது. சமதக்கினி முனிவரின் கமண்டலம் வழிந்து பெருகி இந்த நாக ஆறு உருவாகியது என்று கூறுவார்கள். இதனால் இந்த ஆற்றுக்கு “கமண்டல ஆறு” என்ற பெயரும் உண்டு.

பாம்பு போல வளைந்து போவதால் “நாகநதி” என்ற பெயர் உருவானது. இந்தக் கோவில் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டது என வரலாறு கூறுகிறது. இங்கு ஏராளமான கல்வெட்டுகள் இருக்கிறது.

தசரத மன்னர் இக்கோவிலுக்கு வந்து இங்கு உள்ள லிங்கேஸ்வரரை வழிபட்ட பிறகு தான் ராமர், லட்சுமணர் பிறந்தார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் இறைவனுக்கு புத்திர காமேஸ்வரர் என்ற பெயர் உருவானது. கோவிலுக்குள் தசரதருக்கு ஒரு சிறு சன்னிதியும் இருக்கிறது.

குழந்தை பேறு கிடைக்க பெண்கள் தொடர்ந்து ஐந்து திங்கட்கிழமைகளில் விரதம் இருக்க வேண்டும். ஆறாவது திங்களன்று காலையில் எதுவும் சாப்பிடாமல் கோவிலுக்கு வர வேண்டும். முதலில் ஆற்றில் குளித்து பிறகு அருகில் உள்ள நாகர் சிலைகளை வணங்கி விட்டு கோவிலுக்குள் செல்ல வேண்டும். இதனால் நாக தோஷம் தீரும் என்பது ஐதீகம்.

இந்த கோவிலில் வில்வ மரம் இருக்கிறது. அந்த மரத்தில் பறித்த வில்வ இலைகளை கொண்டு இறைவனுக்கு அர்ச்சனை செய்யப்படுகிறது. இக்கோவிலில் வழிபட்டு குழந்தை செல்வம் பெற்ற தம்பதிகள் இங்கு வந்து பொங்கல் வைத்து வழிபடுவதை தினந்தோறும் பார்க்க முடியும்.

காணும் பொங்கல் அன்று சிறப்பான திருவிழா நடக்கிறது. இதில் ஏராளமான மக்கள் கூடுவார்கள். சிவராத்திரி, நவராத்திரி, பங்குனி உத்திரம், திருக்கல்யாணம் போன்ற விழாக்கள் இக்கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

Recent Post