சமீபத்தில் திருமணமாகிய புதுப்பெண்ணிடம், என்னென்ன கேள்விகளை கேட்கக்கூடாது என்றும், அந்த சமயத்தில் அவர்களது மனம் எவ்வாறு இருக்கும் என்றும் இந்த கட்டுரையில் தெளிவாக பார்க்கலாம்.
புதியதாக ஏதாவது ஒரு பெண்ணுக்கு திருமணாகியிருந்தால், அவர்களிடம் குறிப்பிட்ட சில கேள்விகளை கேட்பதற்கு, ஒரு கூட்டமே அழைந்துக் கொண்டிருக்கும். அந்த கேள்விகள் என்னென்ன என்பது குறித்தும், அந்த கேள்விகள் மூலம், பெண்களின் மனது என்னென்ன வலிகளை சந்திக்கும் என்றும் தற்போது பார்க்கலாம்.
கேட்கக்கூடாத கேள்விகள் என்ன..?
- வேலைக்கு போறீயா..?
திருமணத்திற்கு பிறகு, பெண்கள் வேலைக்கு செல்வது என்பது அடிப்படையான விஷயமாக மாறிவிட்டது. இருப்பினும், ஒரு சிலர் ஏன் வேலைக்கு போகிறாய்..? இப்போதாவது ரெஸ்ட் எடுக்கலாமே..? போன்ற ஆலோசனைகளை வழங்குவார்கள். ஆனால், இந்த கேள்வியும், இந்த ஆலோசனைகளும், புதுமனப் பெண்ணிற்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தும். புதுதாக வந்த குடும்ப சூழல், புதுப் பெண்ணிற்கு அந்நியமாக தெரியலாம். அதனை போக்குவதற்கு அவர்கள் வேலைக்கு செல்வார்கள் அல்லது வருங்கால நிதித் தேவைக்கும் கூட வேலைக்கு செல்வார்கள். இதையெல்லாம் பற்றி தெரியாமல், அவர்கள் குடும்ப விஷயத்தில் சிலர் மூக்கை நுழைப்பது அநாகரீகம் ஆகும்.
- நல்ல சமைப்பீயா..?
உனக்கு நல்லா சமைக்க தெரியுமா..? உன் கணவருக்கு ஏற்றது போல் நன்றாக சமைப்பாயா..? போன்ற கேள்விகள் பெண்களுக்கு எரிச்சலை தரும். சமையல் என்பது, பெண்களை பொறுத்தவரையில், அது சுயவிருப்பத்தை பொறுத்தது. இதுபோன்ற கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்ல விரும்பமாட்டார்கள். எனவே, இத்தகைய கேள்விகளை, புதுப் பெண்களிடம் கேட்டு வாங்கிக்கட்டிக் கொள்ளாதீர்கள்.
- நல்ல செய்தி உண்டா..?
இந்த கேள்வி தான் பொதுவாக பலரையும் எரிச்சலுக்குள்ளாக்கும் ஒன்று. குழந்தை பெற்றுக் கொள்வது என்பது, அது கணவன்-மனைவியின் தனிப்பட்ட விஷயம். இந்த கேள்வியை யாராவது கேட்டால், அவர்களை அடிக்க வேண்டும் என்பது போல் கூட, சில பெண்களுக்கு தோன்றலாம். எனவே, மண்ட பத்ரம்.
- ஏன் இவ்ளோ ஒல்லி ஆய்ட்ட..? குடும்ப பிரச்சனையா..?
திருமணமாகிய சில மாதங்களில் ஒரு சில பெண்கள் எடை கூடுவார்கள், ஒரு சில பெண்கள் எடை குறைந்து மெலிந்துவிடுவார்கள். அந்த சமயத்தில் புதுப்பெண்ணை பார்க்கும் சிலர், ஏன் இவ்வளவு ஒல்லி ஆகிட்ட என்றும், குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையால், இப்படி மெலிந்துவிட்டாயா..? என்றெல்லாம் கேள்வி கேட்பார்கள்.
இவ்வாறு கேள்வி கேட்பதும், புதுப் பெண்ணை எரிச்சலாக்கும். ஒல்லி ஆவதும், குண்டாக மாறுவதும் உடல் சார்ந்த விஷயம். எனவே, அவர்களிடம் அவ்வாறு கேட்கக் கூடாது. ஒரு சில நேரங்களில், நீங்கள் கேட்பது உண்மையாக கூட இருக்கலாம். அதாவது, கணவன் வீட்டில் பிரச்சனையாக கூட இருக்கலாம். ஆனால், நீங்கள் அவ்வாறு கேட்கும் போது, அந்த பிரச்சனைக்கு தீர்வாக அது அமையாமல், மேலும், வலியை தான் தரும் என்பது நிதர்சனம்.
நாம் ஃபார்மால்டிக்கு கேட்கும் இந்த கேள்விகளுக்கு பின்னால், ஒரு பெண்ணின் மன ஓட்டம் எவ்வாறு இருக்கிறது என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். சிறிய கேள்விகளும் கூட அவர்கள் மனதை புன்படுத்திவிடும் என்பதால், ஜாக்கிரதை.