சகல பாவங்களை நீக்கும் இராமேஸ்வரம் கோவில் பற்றிய வரலாறு

ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோவில் இந்துக்களின் புனிதத் தலங்களில் முக்கியமானது. இக்கோவில் பல்வேறு சிறப்புகளை கொண்டது. தேவாரப்பாடல் பெற்ற சிவன் கோவில்களில் இதுவும் ஒன்று. சகல பாவங்களையும் போக்குகின்ற தலமாக இத்தலம் விளங்குகிறது.

12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகவும், 51 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் இந்த கோயில் அமைந்துள்ளது.

உலகிலேயே மிகப் பெரிய பிரகாரத்தை கொண்ட கோவிலாக இக்கோவில் விளங்குகிறது. இதில் மொத்தம் 22 தீர்த்தங்கள் உள்ளன. அதில் அக்னி தீர்த்தம் மிக விசேஷமானது. சீதையை தொட்ட பாவத்திற்காக அக்னி பகவான் இத்தலத்திற்கு வந்து நீராடி இறைவனை வழிபட்டார். இதனால் அக்னி தீர்த்தம் என பெயர் பெற்றது.

சிறந்த சிவபக்தனான ராவணனை போரில் கொன்றதால் ராமனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷத்தை நீக்குவதற்காக அகத்திய முனிவரின் ஆலோசனைப்படி ராமேஸ்வரம் கடற்கரையில் சிவ லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இதனால் அவருக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது.

இங்குள்ள பாதாள பைரவர் பக்தர்களின் பாவத்தை பாதாளத்திற்கு தள்ளி அருள் வழங்கி வருகிறார். இதனால் இவருக்கு பாதாள பைரவர் என்ற பெயர் உருவானது. இவருடைய சன்னதிக்கு அருகில் தான் கோடி தீர்த்தம் உள்ளது.

இந்த கோயில் தாயார் பெயர் பர்வதவர்தனி. 51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. இந்த அம்மனுக்கு சித்திரை 1ம் தேதி சந்தன காப்பு சாற்றி அலங்காரம் செய்வது வழக்கம்.

ராமேஸ்வரத்தில் உள்ள கோவில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது கோவிலில் 1212 தூண்கள் 690 அடி நீளம் 435 அடி அகலம் கொண்ட பிரகாரத்தை கொண்டுள்ளது இங்குள்ள இறைவனுக்கு ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன.

மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை போன்றவை இக்கோவிலின் முக்கிய திருவிழாக்கள்.

இங்குள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி பிறகு ராமநாதரை வழிபட்டால் பாவங்கள் நீங்கி வாழ்வு வளம்பெருகும்.

ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 புனித தீர்த்தங்கள் மற்றும் அதன் பலன்கள்

மகாலட்சுமி தீர்த்தம் – செல்வ வளம் பெருகும்.
சாவித்திரி தீர்த்தம் – பேச்சுத் திறன் வளரும்.
காயத்ரி தீர்த்தம் – உலக நன்மை உண்டாகும்.
சரஸ்வதி தீர்த்தம் – கல்வியில் உயர்வு தரும்.
சங்கு தீர்த்தம் – வசதியாக வாழ்வு அமையும்.
சக்கர தீர்த்தம் – மன உறுதி கிடைக்கும்.
சேதுமாதவ தீர்த்தம் – தடைபட்ட பணிகள் தொடரும்.
நள தீர்த்தம் – தடைகள் அகலும்.
நீல தீர்த்தம் – எதிரிகள் விலகுவர்.
கவய தீர்த்தம் – பகை மறையும்.
கவாட்ச தீர்த்தம் – கவலை நீங்கும்.
கந்தமாதன தீர்த்தம் – எத்துறையிலும் வல்லுநர் ஆகலாம்.
பிரம்மஹத்தி தீர்த்தம் – பிரம்மஹத்தி தோ‌ஷம் நீங்கும்.
கங்கா தீர்த்தம் – பாவங்கள் அகலும்.
யமுனை தீர்த்தம் – பதவி வந்து சேரும்.
கயா தீர்த்தம் – முன்னோர் ஆசி கிடைக்கும்.
சர்வ தீர்த்தம் – முன்பிறவி பாவம் விலகும்.
சிவ தீர்த்தம் – சகல பிணிகளும் நீங்கும்.
சத்யாமிர்த தீர்த்தம் – ஆயுள் விருத்தியாகும்.
சந்திர தீர்த்தம் – கலை ஆர்வம் பெருகும்.
சூரிய தீர்த்தம் – முதன்மை ஸ்தானம் கிடைக்கும்.
கோடி தீர்த்தம் – முக்தி அடையலாம்.

கோவில் நடை திறந்திருக்கும் நேரம்

காலை 4 மணி முதல் மதியம் 1 மணி வரை. பிற்பகல் 3 மணி முதல் இரவு 8.30 வரை

Recent Post