ரோஜா பூவில் உள்ள மருத்துவ குணங்கள்

மலர்களில் அனைவருக்கும் பிடித்தது ரோஜா தான். இதனை மலர்களின் ராஜா என்பார்கள். இந்த ரோஜா பலவிதமான வண்ணத்தில் இருக்கும். ரோஜா செடியில் அதிக அளவில் முட்களும் இருக்கும். முள் வகை செடிகளில் ரோஜா பூப்பதினால் இதனை ஒரு முள் ரோஜா என அழைப்பார்கள்.

ரோஜா பூ இதழ்களை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் உங்களின் தோலின் செல்களின் வளர்ச்சியை மேம்படுத்தி பளபளப்பை அதிகரித்து, சுருக்கங்களை போக்கி, இளமை தோற்றத்தை நீடிக்க செய்கிறது.

ரோஜாவை பச்சையாகவும் காயவைத்தும் பயன்படுத்தலாம். ரோஜா இதழ்களை அப்படியே சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். அத்துடன் கர்ப்பிணிப் பெண்களுக்கு சிறுநீர் சுலபமாக பிரியும்.

ரோஜாவின் மணம் சளியைக் குணப்படுத்தும் ஆற்றலும், வயிற்றை சுத்தமாக்கும் இயல்பும் கொண்டது. தலைவலியை குணப்படுத்தும் மருத்துவ குணமும் ரோஜாவிற்கு உண்டு.

ரோஜா மொட்டுக்களை வாணலியில் போட்டு, லேசாக வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டால் சீதபேதி அல்லது ரத்தபேதி இருந்தால் விரைவில் குணமாகும்.

ரோஜாவிலிருந்து தைலம் எடுக்கலாம். இந்தத் தைலம் காது வலி, காது குத்தல், காதில் புண் ஆகியவற்றிக்கு மருந்தாகப் பயன்படுகிறது. ஆனால் அது சுத்தமானதாக இருக்க வேண்டும்.

ரோஜா இதழ்களைக் கொண்டு குல்கந்து தயார் செய்யலாம். குல்கந்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெருகும். அத்துடன் அழகான உடல் அமைப்பை பெறலாம்.

ரோஜா இதழ்களிலிருந்து சர்பத் தயார் செய்யலாம். இந்த சர்பத் மூலச்சூடு, மலச்சிக்கல், குடலில் ஏற்படும் புண் இவைகளை குணப்படுத்தும். மேலும் வாயிலுள்ள துர்நாற்றத்தையும் போக்கும்.

ரோஜாவை நன்கு காய வைத்து அரைத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். ரோஜா மலரில் உள்ள துவர்ப்பு சக்தி குழந்தைகளின் சீதபேதிக்கு மருந்தாகிறது.

பெண்களுக்கு ஏற்படும் கருப்பை தொடர்பான நோய்களுக்கும் ரோஜா நல்ல மருந்தாக பயன்படுகிறது. ரோஜாவிலிருந்து தயாரிக்கப்படும் பன்னீர் வாசனை திரவியமாக பயன்படுகிறது.

Recent Post

RELATED POST