அருள்மிகு கிருஷ்ணர் (துவாரகா நாதர்) திருக்கோயில்

ஊர் – துவாரகை

மாவட்டம் – அகமதாபாத்

மாநிலம் – குஜராத்

மூலவர் – கிருஷ்ணர் துவாரகாநாதர் (துவாரகீஷ்)

தாயார் – பாமா ,ருக்மணி, ராதா

திருவிழா – கோகுலாஷ்டமி, தீபாவளி, ஹோலி , குஜராத் புத்தாண்டு ,மட்கோபாட் என்ற உரியடி திருநாள், கோகுலாஷ்டமி அன்று பாவன் பேடா என்ற நடனத்தை பெண்கள் ஆடுவர். ஒவ்வொரு பெண்ணும் 52 பானைகளை தலையில் சுமந்து கொண்டு ஆடும் இந்த நடனம் பார்க்க மிகவும் அழகாக இருக்கும்.

திறக்கும் நேரம் – காலை 6:30 மணி முதல் பகல் 12: 45 மணி வரை ,மாலை 5 மணி முதல் இரவு 9 :45 மணி வரை, பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 101 வது திவ்ய தேசம்.

தல வரலாறு:

கிருஷ்ணரின் தாய்மாமன் கம்சன் அவருடைய மாமனாராகிய ஜராசங்கு கிருஷ்ணன் மீது 16 முறை படையெடுத்து தோற்றுப்போனார். பின் 17-வது முறை சண்டையிட்ட போது மதுரா நகரில் இருந்து மக்களை வெளியேற கிருஷ்ணர் ஆணையிட்டார். அப்போது அங்கு வாழ்ந்து வந்த ஒரு மகாராஜாவின் மகள் ருக்மணியை மணந்து, 100 ஆண்டுகள் மன்னராக ஆட்சி செய்தார்.

ஒரே இரவில் இப்பகுதியை தங்கத்தாலான நகராக துவாரகை உருவாக்கினார். கண்ணன் இங்கே அரசனாக வாழ்ந்து மக்களிடையே கலந்து பழகியதால் பக்தர்கள் அவரை அரசனாகவும் போற்றுகிறார்கள், பகவான் ஆகவும் துதிக்கிறார்கள். இப்போது உள்ள துவாரகா கிருஷ்ணர் வாழ்ந்த காலத்தில் இருந்தது இல்லை.

கி.பி 8 முதல் 10 ஆம் நூற்றாண்டுகளில் அன்னியர் படையெடுப்பால் அழிந்து விட்டதாக, பின் இப்போதுள்ள கோயில் 15 ,16 ஆம் நூற்றாண்டுகளில் குஜராத்தை ஆண்ட சாளுக்கிய அரச பரம்பரையினர் கட்டியதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இக்கோவிலை ஜெகத் மந்திர் என்றும் அழைக்கிறார்கள்.

இங்கு கிருஷ்ண ஜெயந்தி வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இவ்வூர் ஒரு காலத்தில் சுதாமபுரி எனப்பட்டது. இங்கு தான் சுதாமர் எனப்படும் குசேலர் பிறந்தார். இவருக்கு தனிக்கோயில் இங்குள்ளது. இந்தக் கோயில் ஐந்து மாடிகளைக் கொண்டது. 60 அழகிய சிற்பங்களுடன் கூடிய தூண்கள் தாங்குகின்றன.

இங்குள்ள சிற்பங்கள் சுற்றுலாப் பயணிகளைக் கவர்கின்றன. கீழே சன்னிதானம், மேல்மாடியில் கோபுரமும் உள்ளது. இதன் உயரம் மட்டும் 172 அடி. கோயிலின் நடுவில் மிகப்பெரிய மண்டபம் உள்ளது.

இங்கு துளசிக்கு என தனி சன்னதி இருப்பது சிறப்பாக உள்ளது. ஆதிசங்கரரால் உருவாக்கப்பட்ட சாரதா பீடம் உள்ளது. ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையான தலம் இதுவே என ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது. துவாரகா கிருஷ்ணர் கோயில் கோமதி நதிக்கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள நதியில் நீராடினால் கங்கா ஸ்நானம் செய்த பலன் கிடைக்கும்.

இக்கோயில் கோபுரத்தின் உச்சியில் முக்கோண வடிவில் சிவப்பு பட்டுத்துணியில் ஆன சூரிய, சந்திர உருவங்கள் பதித்த 82 மீட்டர் நீளம் உள்ள மிகப்பெரிய கொடி தினமும் மூன்று முறை ஏற்றி இறக்கப்படுகிறது. கோபுர உச்சியில் உள்ள வட்டமான இடத்தில் நெய் தீபம் ஏற்றப்படுகிறது.

காலையில் பாலகிருஷ்ணன் ஆகவும், பகலில் மகாராஜாவை போலவும், மாலையில் பூஜிக்கத் தக்க அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். இங்கு கிருஷ்ணரின் மனைவியான ருக்மணிக்கு தனிக்கோயில் உள்ளது. மற்ற மனைவியர்களின் கோவில்கள், தாய் தேவகி கோயில், கல்யாணராமர், திருவிக்ரம மூர்த்தி, லட்சுமிநாராயணர் கோயில்கள் உள்ளன.

இங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் சங்க தீர்த்தம் உள்ளது. இங்கு ஸ்ரீகிருஷ்ணன் ஆட்சி செய்த தர்ம சபையும் ஒரு மச்சாவதார பகவான் கோவிலும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆண்டு முழுவதும் எல்லா விழாக்களும் சிறப்பாக நடக்கின்றன.

கோயில் கருவறை மற்றும் ஒரு பெரிய மண்டபமும் அதை சுற்றிலும் மூன்று தலைவாசல்களும் உள்ளது. ஒருபுறம் பிரதான கோபுரம் மற்றொருபுறம் அதைவிட சிறிய கோபுரம் 5 அடுக்குகளைக் கொண்டது. பிரதான கோபுரம் ஜகத் மந்திர் அல்லது நிஜ மந்திர் என அழைக்கப்படும் கருவறை 72 தூண்களில் மேல் நிற்கிறது.

கருவறையில் கிருஷ்ணர் சங்கு சக்ர கதா பாணியாக பத்மத்துடன் ராஜ அலங்காரத்தில் தலையில் முண்டாசுடன் ஜொலிக்கிறார். சதுர்புஜ விக்ரகம் 2.25 அடி உயரம் கோயிலின் பின் வாயில் வழியாக 56 படிகள் இறங்கினால் கோமதி நதி படிகள் இரு புறமும் கடைகள் சிறிய கோயில்கள் மற்றும் துலாபாரதுக்கான மண்டபம் கோமதி நதியின் தண்ணீர் சிறிது உப்பு கரித்தாலும் பரிசுத்தமாக உள்ளது.

படித்துறையில் நடந்து சென்றால் பல கோயில்களை காணலாம். சிறிது தூரம் சென்று திரும்பிப் பார்த்தால் கோயில் ஆழியில் இருந்து எழுவது போன்ற தோற்றம் உள்ளது.

Recent Post