சவுரிராஜப்பெருமாள் கோவில் வரலாறு

ஊர்: திருக்கண்ணபுரம்

மாவட்டம்: நாகப்பட்டினம்

மாநிலம் : தமிழ்நாடு.

மூலவர் : நீலமேகப்பெருமாள்

தாயார் : கண்ணபுரநாயகி

தீர்த்தம்: நித்யபுஷ்கரிணி .

சிறப்பு திருவிழாக்கள்: வைகாசியில் 15 நாள், மாசியில் பிரம்மோற்ஸவம்

திறக்கும் நேரம்: காலை 6:00 மணி முதல் 11:00 மணி வரை, மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.

தல வரலாறு ;

முற்காலத்தில் சில முனிவர்கள் இத்தலத்தில் பெருமாளை வேண்டி தவம் செய்தனர். உணவு உறக்கம் ஏதுமின்றி பெருமாளை மட்டும் தியானித்து வந்ததால் அவர்கள் நெற்கதிர்கள் போன்று மெலிந்த தேகம் உடையவர்களாக இருந்தனர்.

மகாவிஷ்ணுவிடம் அஷ்டாட்சர மந்திரம் கற்றுக்கொண்டு உபரிசிரவசு எனும் மன்னன். ஒருசமயம் தன் படையுடன் இவ்வழியாக திரும்பிக் கொண்டிருந்தான், அப்போது வீரர்களுக்கு பசியெடுத்தது. எனவே இங்கு தவம் செய்து கொண்டிருந்த முனிவர்களை நெற்கதிர்கள் என நினைத்து வீரர்கள் அவர்களை வாளால் வெட்டினர்.

முனிவர்களின் நிலையைக் கண்ட விஷ்ணு, சிறுவன் வடிவில் வந்து உபரிசிரவசுவத்துடன் போர் புரிந்தார். மன்னனின் படையால் சிறுவனை ஒன்றும் செய்ய முடியவில்லை. எனவே இறுதியாக மன்னன் தான் கற்றறிந்த அஷ்டாட்சர மந்திரத்தை, சிறுவன் மீது செலுத்தினான்.

அம்மந்திரம் சிறுவனின் பாதத்தில் சரணடைந்தது. இதைப்பார்த்த மன்னன் தன் முன் இருப்பது இறைவன் என அறிந்து மண்டி இட்டான். மன்னன் தன்னை எதிர்த்து நிற்பது மகாவிஷ்ணு எனத் தெரிந்து மன்னிப்பு கேட்டான். பெருமாள் அவனை மன்னித்து நீலமேகப் பெருமாள் காட்சி தந்தார். அவனது வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளினார். பின் மன்னன் விஸ்வகர்மாவை கொண்டு இங்கு கோவில் எழுப்பினான்.

முன்னோரு காலத்தில் இக்கோயில் அர்ச்சகர் சுவாமிக்கு சாத்திய மாலையை, தன் காதலிக்கு சூடி அழகு பார்த்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் மன்னர் கோயிலுக்கு வந்துவிட, அவருக்கு மரியாதை செய்ய அர்ச்சகரிடம் சுவாமி மாலை இல்லை. எனவே தன் காதலிக்கு சூட்டிய மாலையையே மன்னருக்கு அணிவித்தார்.

மன்னர் அம்மாலையை பார்த்தபோது ஒரு பெண்ணின் முடி அதில் இருப்பதை கண்டார். மாலையில் எப்படி முடி வந்தது என அந்த அர்ச்சகரிடம் கேட்டார்? அப்போது அந்த அர்ச்சகர் பெருமாளின் தலையில் இருந்த முடி தான் என பொய் உரைத்தார். மன்னருக்கு சந்தேகம் வந்து, தான் பெருமாளின் திருமுடியை பார்க்க வேண்டும் என்று அர்ச்சகரிடம் சொன்னார்.

மறு நாள் கோவிலுக்கு வந்தால் முடியைக் காட்டுவதாக அர்ச்சகர் கூறினார். சுவாமிக்கு திருமுடி இல்லாதபட்சத்தில் தண்டனைக்கு ஆளாக வேண்டுமே என கலங்கிய அர்ச்சகர் அன்றிரவு சுவாமியை வணங்கி தன்னை காக்கும்படி வேண்டினார். மறுநாள் மன்னர் கோவிலுக்கு வந்தார். அர்ச்சகர் பயந்துகொண்டு சுவாமியின் தலையை மன்னருக்கு காட்ட திருமுடியுடனே காட்சி தந்தார் பெருமாள். எனவே சவுரிராஜப் பெருமாள் என்ற பெயர் பெற்றார்.

அமாவாசையன்று உலா செல்லும்போது மட்டும் திருமுடி தரிசனம் காண முடியும். வைகாசி பிரம்மோற்ஸவத்தின் போது சுவாமி அதிகாலையில் சிவன், மாலையில் பிரம்மா, இரவில் விஷ்ணு என மும்மூர்த்திகளாக காட்சி தருகிறார். விஷ்ணுவின் இந்த மும்மூர்த்தி தரிசனம் விசேஷ பலன்களைத் தரக்கூடியது.

சௌரி என்ற சொல்லுக்கு முடி என்றும் அழகு என்றும் பொருள் உண்டு. கருடன் தன் தாயை விடுவிப்பதற்காக பாற்கடலில் அமிர்தம் பெற்று திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் யாருக்கும் கிடைக்காத அமிர்தத்தை தான் கொண்டு வருவதை எண்ணி, அவர் மனம் கர்வம் கொண்டது. கர்வத்துடன் அவர் இத்தலத்திற்கு மேலே சென்றதால் தன் சக்தியை இழந்து கடலில் விழுந்தார்.

தவறை உணர்ந்த கருடன் மன்னிப்பு வேண்டி, கடலினுள் இருந்த ஒரு மலையின் மீது சுவாமியை வேண்டி தவம் செய்தார். விஷ்ணு அவரை மன்னித்து வாகனமாக ஏற்றுக்கொண்டார். மாசி பவுர்ணமியில் கடற்கரையில் கருடனுக்கு காட்சி தரும் விழா நடக்கிறது. இவ்விழாவின் போது பக்தர்கள் ஸ்வாமியை “மாப்பிள்ளை’” என்று கோஷமிட்டு வித்தியாசமாக வரவேற்கின்றனர். இங்குள்ள தீர்த்தம் மிகவும் விசேஷமானது.

உத்தராயணத்தில் போது மூன்று நாட்கள் இத்தீர்த்தத்தில், அனைத்து நதிகளும் நீராடி தங்கள் பாவத்தை போக்கிக் கொள்வதாக ஐதீகம். இத்தலத்தில் அமாவாசை தினத்தில் பித்ரு பூஜைகள் செய்கிறார்கள். தோஷத்தால் பாதிக்கப்பட்ட “இந்திரன’’ இங்கு வந்து நவகிரக பிரதிஷ்டை செய்து, சுவாமியை வணங்கி தோஷம் நீங்கப் பெற்றான். இந்த நவகிரகம் சுற்றிலும் 12 ராசிகள் உடன் இருப்பது வித்தியாசமான அமைப்பாகும். இத்தலம் பூலோக வைகுண்டம் என சொல்லப்படுகிறது.

இங்கு சொர்க்கவாசல் இல்லை. கருவறைக்கு மேல் உள்ள விமானத்தில் விஷ்ணுவை வணங்கி முனிவர்கள் தவம் இருப்பதாக ஐதீகம். எனவே இங்கு விமானத்தை தரிசனம் செய்ய முடியாதபடி சுற்றி மதில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. முன்னர் ஒரு காலத்தில் இப்பகுதியை முனையதரையன் என்றொரு குறுநில மன்னர் ஆட்சி செய்து வந்தார்.

தினசரி பெருமாளை வணங்கிவிட்டு உணவு உண்பதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். பெருமாள் சேவைக்காக செல்வங்கள் அனைத்தும் செலவழித்து வறுமையில் வாடிய அவர். மன்னனுக்கு வரி கட்டவில்லை. எனவே மன்னன் அவரை சிறைபிடித்து சென்றார். அன்று மன்னரின் கனவில் தோன்றிய விஷ்ணு, அவரை விடுவிக்கும்படி சொல்லவே முனையதரையன் விடுவிக்கப்பட்டார்.

இரவில் வீடு திரும்பிய தனக்கு ,அரிசி பருப்பு உப்பு மட்டும் கலந்த பொங்கல் செய்து கொடுத்தால் மனைவி. அவர் பெருமாளை மனதில் நினைத்து நைவேத்தியம் படைத்து சாப்பிட்டார். மறுநாள் அர்ச்சகர் கோயிலுக்கு வந்தபோது, கருவறையில் சுவாமியின் வாயில் பொங்கல் ஒட்டி இருப்பதை கண்டார்.

இத்தகவல் மன்னரிடம் தெரிவிக்கப்பட்டது. மன்னரும் அதைக் கண்டு வியந்து போனார். அன்றிலிருந்து இக்கோவில் இரவு பூஜையின்போது பொங்கல் படைக்கும் பழக்கம் நடைமுறையில் இன்றும் இருந்து கொண்டிருக்கிறது.

Recent Post