தல வரலாறு
பெருமாளின் அவதாரங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக நரசிம்ம அவதாரத்தை கூறுகின்றனர். இரணியனை வதம் செய்த பின் நரசிம்மர் அமைதி அடைய இவ்விடத்தில் ஆசையுடன் இருக்க விரும்பியதால் “வேளிருக்கை’ என்றாகி பெயர் மருவி “வேளுக்கை’ என்றாகிவிட்டது. “வேள்’ என்ற சொல்லுக்கு “ஆசை’ என்று பொருள்.
ஒரு சமயம் பிரம்மன் யாகம் செய்த வேலையில் அரக்கர்களால் தடை ஏற்பட்டது. எனவே பெருமாளிடம் வேண்டினார் பிரம்மன். வேண்டுதலை ஏற்று பிரகலாதனுக்காக எடுத்த அதே நரசிம்ம அவதார திருக்கோலத்துடன் “ஹஸ்திசைலம்’ என்ற குகையிலிருந்து புறப்பட்டு அசுரர்களை விரட்டினார்.
பின் இத்தலத்தில் இருந்து மேற்கு நோக்கி அமர்ந்த நிலையில் யோக நரசிம்மராக காட்சி கொடுக்கிறார். பெருமாளின் 108 திருப்பதிகளில் இது 47 வது திவ்ய தேசம்.
இத்தல நரசிம்மரை வணங்கினால் துன்பங்கள் விலகும் என்பது நம்பிக்கை. நரசிம்மருக்கு எதிரில் உள்ள கருடாழ்வார் உக்கிரம் தாளாமல் சற்று தலை சாய்த்து பயத்துடன் இருப்பது அதிசய அமைப்பாகும். இப்பெருமாளை “கமாஸீகாஷ்டகம்’ என்ற ஸ்லோகத்தால், சுவாமி தேசிகனும் மற்றும் ஆழ்வார்களும் போற்றியுள்ளனர் இதை தினமும் பாராயணம் செய்தால் நரசிம்மரின் பரிபூரண அருள் கிடைக்கும்.
திறக்கும் நேரம்: காலை 7:30 மணி முதல் 11:00 மணி வரை, மாலை 5:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை.