திருவிக்கிரமசுவாமி திருக்கோயில் வரலாறு

ஊர் : திருக்கோவிலூர்

மாவட்டம்: விழுப்புரம்

மாநிலம் : தமிழ்நாடு.

மூலவர் : திருவிக்கிரமர்

தாயார் : பூங்கோவல் நாச்சியார்

தீர்த்தம் : பெண்ணையாறு,கிருஷ்ண தீர்த்தம்,ஸ்ரீசக்ரதீர்த்தம்

ஸ்தலவிருட்சம் : புன்னைமரம்

சிறப்பு திருவிழாக்கள் : பங்குனி மாதம்-பிரமோற்சவம் 15 நாட்கள் நடைபெறுகிறது, மாசி மாதம்-மாசி மக உற்சவம், புரட்டாசி பவித்ர உற்சவம்.வருடத்தின் விசேஷ நாட்களான தீபாவளி,பொங்கல்,தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின் போது கோயிலில் பெருமாளுக்கு விஷேச அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.

திறக்கும் நேரம் : காலை 6:30 மணி முதல் 12:00மணி வரை, மாலை 4:00மணி முதல் இரவு 8:30மணி வரை.

தல வரலாறு

அரசர்களில் தான தர்மத்தில் சிறந்தவனாக இருந்த மகாபலி, தன்னைவிட யாரும் புகழ் பெற்றவர்களாக இருந்துவிட கூடாது என்பதற்காக, அசுர குல குருவான சுக்கிராச்சாரியார் தலைமையில் ஒரு யாகம் செய்தான். அப்போது அவனது ஆணவத்தை அடக்கும் விதமாக பெருமாள் வாமன அவதாரம் எடுத்து மன்னனிடம் மூன்றடி மண் கேட்டார். வந்திருப்பது பெருமாள் என அறிந்த சுக்ராச்சாரியார் இந்த தானத்தை செய்ய விடாமல் தடுத்தார். ஆனால் மன்னன் அதை கேட்காமல் தானம் கொடுக்க சம்மதித்தான்.

அப்போது வாமனர் விஸ்வரூபம் எடுத்து உலகை ஒரு அடியாகவும் ஆகாயத்தை ஒரு அடியாகவும் வைத்து, இன்னும் ஒரு அடி எங்கே என கேட்டார்? வந்திருப்பது மகாவிஷ்ணு என அறிந்த மன்னன் தன் தலையை தாழ்த்தி ,என் தலையை தவிர வேறு இடம் என்னிடம் இல்லை என்றார் .அப்போது வாமனர் அவன் தலையை தன் பாதத்தால் அழுத்தி மூன்றாவது அடியை வேலையில் சுக்கிராச்சாரியார் வண்டு ரூபத்தில் நீர் பாதையை அடைத்தார். பெருமாள் இதனை அறிந்து தர்ப்பைப் புல்லால் கமண்டலத்தை குத்தினார். இதனால் சுக்ராச்சாரியாரின் ஒரு கண் குருடாகவே வெளியேறிப் போய் விடுகிறார். உடனே கெண்டயில் உள்ள நீர் தெளித்து மூன்றாவது அடி தானம் பெற்றார். இவ்வாறு மன்னரின் ஆணவத்தை அடக்கி தன்னோடு சேர்த்துக்கொண்டார்.

108 திவ்ய தேசங்களில் இது 43 வது திவ்ய தேசம். இங்கு விஷ்ணுவும், துர்க்கையும் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்கள். மூலவர் திருமேனி மரத்திலான, நின்ற கோலத்தில் உள்ளார். சாளக்கிராமத்திலான கிருஷ்ணர் தனி சன்னதியில் உள்ளார். இக்கோயிலின் ராஜகோபுரம் தமிழகத்தின் மூன்றாவது பெரிய கோபுரம் ,192 அடி உயரம் கொண்டு ,11 நிலைகளைக் கொண்டது.

அனைத்து பெருமாள் தலங்களிலும் வலது கையில் சக்கரமும் இடது கையில் சங்கும் வைத்திருப்பார். இங்குள்ள பெருமாள் மகாபலியை தன்னுடன் இணைத்துக் கொண்ட மகிழ்ச்சியில், தான் என்ன செய்கிறோம் என்பதை மறந்து வலக்கையில் சங்கும் இடக்கையில் சக்கரமும் ஏந்தி காட்சி கொடுக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

பொதுவாக சிவாலயங்களில் விஷ்ணு துர்க்கையை காண முடியும், ஆனால் 108 திருப்பதிகளில் இங்கு மட்டும் தான் பெருமாள் சன்னதி அருகில் விஷ்ணு துர்க்கை காட்சி கொடுக்கிறாள். இத்தலம் சென்று வழிபட்டால் சகோதர, சகோதரிகள் உறவு பலப்படும் என சொல்லப்படுகிறது. பெருமாள் சன்னதிக்கு எதிரே 40அடி உயரமுள்ள கருடன் தூண் ஒரே கல்லில் செதுக்கப்பட்டது .அதன் மேல் ஒரு சிறிய கோயில் காண்பவரை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இந்த தூணின் மேல் பகுதியில் கருடன் நின்று பெருமாளை வணங்குவதாக ஐதீகம்.

Recent Post