திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. மேலும் ஆறு பிரகாரங்கள், 142 சன்னதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம் உள்ளன.
இத்தலம் பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாகவும் குறிப்பிடப்படுகிறது. தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 233வது தேவாரத்தலமாகும்.
“அருணம்” என்றால் “சிவப்பு நிறத்தில் இருக்கும் நெருப்பு”. “சலம்” என்றால் “மலை”. சிவபெருமான் சிவப்பு நிறத்தில் எரியும் நெருப்பின் தன்மை கொண்ட மலையாக இருப்பதால் இந்த மலைக்கு “அருணாச்சலம்” என்று பெயர் ஏற்பட்டது.
இத்தலத்தில் சுயம்புலிங்கத் திருமேனியாக நாகக் கிரீடம் அணிந்து தூய வெண்ணிற ஆடையுடன் அருணாசலேஸ்வரர் என்ற திருநாமத்துடன் பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.
இத்தலத்தில் உள்ள மலைதான் இத்தலத்துக்கே மிகப்பெரும் புனிதமாக கருதப்படுகிறது. சித்தர்கள் முனிவர்கள் ஞானிகள் எல்லோரும் இந்த மலையையே சிவலிங்கமாக கருதி வழிபட்டுள்ளனர்.
கார்த்திகை மாதத்தின் மிகப்பெரிய விசேஷங்களில் ஒன்றாக திருக்கார்த்திகை தீபம் இக்கோயிலில் மிக விமர்சையாக கொண்டாடப்படும். கார்த்திகை மகாதீபம் இக்கோயிலில் 10 நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. விழாவின் இறுதி நாளன்று மாலை 6 மணிக்கு மேல் அருகேயுள்ள தீபக்கொப்பரையில் ஒன்று சேர்த்து எரிய விடுவார்கள்.
ஏழடி உயரமுள்ள செப்புக் கொப்பரையில் 3 டன் பசுநெய், 1000 மீட்டர் காடாதுணி திரி, 2 கிலோ கற்பூரம் இட்டு தீபம் ஏற்றுவார்கள். இந்த தீபத்தின் ஒளியானது சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பவர்களும் பார்க்கலாம்.
இக்கோயிலில் முருகன், விநாயகர், அர்த்தநாரீஸ்வரர், திருமால், பைரவர், பிரம்ம லிங்கம், பாதாள லிங்கம் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன.
திருவண்ணாமலை கோயிலில் ஆண்டு தோறும் ஆனி மாத பிரம்மோற்சவம், மாசி மகம் தீர்த்தவாரி, கார்த்திகை தீபம், பரணி தீபம், மகாதீபம் விழாக்கள் நடைபெறுகின்றன.
கோபுரங்களும் அதன் உயரமும்:
- கிளி கோபுரம் – 81 அடி உயரம்
- தெற்கே திருமஞ்சன கோபுரம் – 157 அடி உயரம்
- தெற்கு கட்டை கோபுரம் – 70 அடி உயரம்
- மேற்கே பேய் கோபுரம் – 160 அடி உயரம்
- மேற்கு கட்டை கோபுரம் – 70 அடி உயரம்
- வடக்கே அம்மணி அம்மன் கோபுரம் – 171 அடி உயரம்
- வடக்கு கட்டை கோபுரம் – 45 அடி உயரம்.
கிரிவலப் பாதையில் அமைந்துள்ள அஷ்ட லிங்கங்கள்:
- இந்திரலிங்கம்.
- அக்னி லிங்கம்.
- எமலிங்கம்.
- நிருதி லிங்கம்.
- வருண லிங்கம்.
- வாயுலிங்கம்.
- குபேர லிங்கம்.
- ஈசான லிங்கம்.
கிரிவலம் மேற்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்:
- ஞாயிற்றுக்கிழமை – சிவலோக பதவி கிட்டும்.
- திங்கள்கிழமை – இந்திர பதவி கிடைக்கும்.
- செவ்வாய்க்கிழமை – கடன், வறுமை நீங்கும்.
- புதன்கிழமை – கலைகளில் தேர்ச்சியும், முக்தியும் கிடைக்கும்.
- வியாழக்கிழமை – ஞானம் கிடைக்கும்.
- வெள்ளிக்கிழமை – வைகுண்டப் பதவி கிடைக்கும்.
- சனிக்கிழமை – பிறவிப் பிணி அகலும்.
கோயில் திறந்திருக்கும் நேரம்
காலை 5 மணி முதல் 12.30 மணி வரையும், மாலை 3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.