திருவெள்ளியங்குடி பெருமாள் கோயில் வரலாறு

ஊர் : திருவெள்ளியங்குடி

மாவட்டம் : தஞ்சாவூர்

மாநிலம் : தமிழ்நாடு.

Advertisement

மூலவர் : கோலவல்லி ராமர்

தாயார் : மரகதவல்லி

ஸ்தலவிருட்சம் : செவ்வாழை

தீர்த்தம் : சுக்கிர தீர்த்தம்,பிரம்ம தீர்த்தம்,,பரசுராம தீர்த்தம்,,இந்திரா தீர்த்தம் .

சிறப்பு திருவிழாக்கள் : ராமநவமி,கோகுலாஷ்டமி,நவராத்திரி,திருக்கார்த்திகை,வைகுண்ட ஏகாதசி

திறக்கும் நேரம் : காலை 8:00 மணி முதல் 12:00மணி வரை, மாலை 5:00மணி முதல் இரவு 7:00மணி வரை.

பெருமாள் வாமன அவதாரமெடுத்து மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டார் வந்திருப்பது இறைவன் என்பதை அறியாத மன்னன் தாரை வார்த்து கொடுக்க முற்பட்டான். அசுர குல ,குரு சுக்கிராச்சாரியார் உண்மை நிலையை அறிந்து தாரைவார்க்கும் செப்பு குடத்தின் துவாரத்தை ஒரு வண்டாக மாறி அடைத்துவிட்டார். குருவின் இந்த செயலை கண்ட பகவான், ஒரு குச்சியால் துவாரம் வழியாக குத்த ஒரு கண்ணை இழக்கிறார் சுக்கிரன். ஒளியிழந்த கண்ணுடன் பல தலங்களுக்கு சென்று வழிபட்டு கடைசியாக இத்தலத்து பெருமானை வழிபட்டு மீண்டும் பார்வை பெற்றார். இதனால் இத்தலம் வெள்ளியங்குடி என பெயர் பெற்றது.

சுக்கிரன் இத்தலம் வந்து தவம் செய்வதற்கு மற்றொரு காரணமும் உள்ளது. தேவ சிற்பியான விஸ்வகர்மா பெருமாளுக்கு அழகாக கோயில்களை கட்டி முடித்தார். இது போல் தன்னால் கோயில்கள் கட்ட முடியவில்லையே என அசுர குல சிற்பி மயன் வருத்தப்பட்டு பிரம்மனிடம் வேண்டினார். அதற்கு பிரம்மா இத்தலத்தில் கடும் தவம் செய்தால் பெருமாள் அருளால் எல்லாம் நல்லபடியாக நடக்கும் எனக்கூறினார். தவத்தில் மகிழ்ந்த பெருமாள் சங்கு சக்ரதாரியாக காட்சி கொடுத்தார். ஆனால் மயன் தனக்கு இந்த தரிசனத்திற்கு பதில் ராமாவதாரம் காட்சி தரவேண்டும் என்றான். தன் கரத்திலிருந்து சங்கு சக்கரத்தை கருடாழ்வார் இடம் கொடுத்துவிட்டு அவர் இராமனாக வில் அம்புகளுடன் தரிசனம் தந்தார் .

பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இது 22 வது திவ்ய தேசம் .இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது .இங்குள்ள மகாவிஷ்ணுவை தரிசித்தால் 108
திருப்பதிகளையும் தரிசித்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தனக்கு கண்ணில் ஒளி தந்த பெருமாளுக்கு நன்றி செலுத்தும் வகையில் சுக்கிர பகவான் அணையா தீபமாக இத்தலத்தில் இரவு பகலாக பிரகாசித்து கொண்டிருக்கிறார். எனவே இத்தல நவகிரகத்தில் சுக்கிரத்தலமாக போற்றப்படுகிறது.

பெருமாளின் 108 திவ்யதேசங்களில் இங்கு மட்டும் தான் கருடாழ்வார் சங்கு சக்கரம் ஏந்தி நான்கு திருக்கரங்களுடன் காட்சி கொடுக்கிறார். இத்தளத்தில் கருங்கல் தரையில் கதலி வாழை, முளைத்து வருடத்திற்கு ஒருமுறை வாழைத்தார் வருவதும் வாழையடி வாழையாக இருந்து வரும் காட்சியையும் இன்றும் காணலாம்.

மேலும் அனைத்து 108 திவ்ய தேசங்கள் வைணவத் தலங்களின் வரலாற்றை இங்கு அறிந்து கொள்ளலாம்.