ஊர் -திருவித்துவக்கோடு
மாவட்டம் -பாலக்காடு
மாநிலம் -கேரளா
மூலவர் -உய்யவந்த பெருமாள்
தாயார் -வித்துவக்கோட்டு வல்லி
தீர்த்தம்– சக்கர தீர்த்தம்
திருவிழா– வைகுண்ட ஏகாதசி, திருவோணம்
திறக்கும் நேரம் – காலை 5 மணி முதல் பகல் 10;30 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 7;30 மணி வரை.
தல வரலாறு ;
பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இது 67 வது திவ்ய தேசம். பஞ்சபாண்டவர்கள் வனவாசம் மேற்கொண்டு தென்னிந்திய பகுதிக்கு வந்து இங்குள்ள நீளா நதிக்கரை ஓரம் ஒரு அழகும், தெய்வீகம் கலந்த அமைதியும் கண்ட இந்த இடத்தை கண்டு சில காலம் அங்கேயே தங்க முடிவு செய்தனர்.
அந்த நேரத்தில் தினமும் பூஜை செய்வதற்காக கோயில் கட்டி அர்ஜுனன் மகாவிஷ்ணுவின் சிலையையும், தர்மர் ,நகுலன், சகாதேவன், பீமன் ஆகிய நால்வரும் தனித்தனி பெருமாள் சன்னதி பிரதிஷ்டை செய்தனர். பஞ்ச பாண்டவர்கள் அனைவரும் தங்களது வனவாசத்தில் பெரும்பாலான நாட்கள் இங்கேயே தங்கி பூஜை செய்ததாக கூறப்படுகிறது. சில காலங்களுக்குப் பின் பாண்டிய மன்னன் ஒருவனால் மிகப்பெரிய சுற்றுமதில் எழுப்பப்பட்டது.
சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியை சேர்ந்த முனிவர் ஒருவர் காசிக்குச் சென்று வெகு காலம் வாழ்ந்த போது, அவரது தாயாரின் உடல்நிலை சரியில்லை என அறிந்து திரும்பிய போது, அவரது பக்தியின் காரணமாக “காசிவிஸ்வநாதரும்” முனிவரது குடையில் மறைந்து வந்ததாக கூறப்படுகிறது.
முனிவர் இக்கோயிலை கண்டு தனது குடையை இத்தலத்து பலிபீடம் மீது வைத்து விட்டு குளிக்க சென்றார். அவர் திரும்பி வந்து பார்த்தபோது குடை வைத்திருந்த பலிபீடம் வெடித்து சிதறி அதிலிருந்து ஒரு சிவலிங்கம் தோன்றியிருப்பதை கண்டார். காசியிலிருந்து விஸ்வ நாதரே பஞ்சபாண்டவர்கள் பிரதிஷ்டை செய்த இத்தலத்திற்கு தங்குவதற்கு வந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
எனவே மூலவரை தரிசிக்கும் முன் இந்த சிவலிங்கத்தை தரிசித்து செல்ல வேண்டும். கேரளாவில் சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இத்தலம் விளங்குகிறது. இத்தலத்தை “ஐந்துதலை மூர்த்தி தலம்” என அழைக்கின்றனர். பத்து நதிகள் ஒன்றாக இணையும் பாரதப் புழா நதிக்கரையில் கோயில் அமைந்திருப்பதால், இத்தலத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறந்ததாகும்.