தோத்தாத்ரிநாதன் கோவில் வரலாறு

ஊர் -நாங்குனேரி

மாவட்டம் -திருநெல்வேலி

மாநிலம் -தமிழ்நாடு

மூலவர் -தெய்வநாதன், வானமாமலை

தாயார் -வரமங்கை தாயார்

தலவிருட்சம் -மாமரம்

தீர்த்தம் -சேற்றுத்தாமரை

திருவிழா -பங்குனி சித்திரை மாதங்களில் நடக்கும் பிரம்மோற்சவம் இத்தலத்தில் மிக முக்கிய திருவிழாக்கள் ஆகும்.

திறக்கும் நேரம் -காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை.

தல வரலாறு;

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 80வது திவ்ய தேசம். மது, கைடபர் என்ற இரு அரக்கர்களை மகாவிஷ்ணு அழித்தார். அப்போது அரக்கர்களின் துர்நாற்றம் பூமியெங்கும் பரவியது. பூமாதேவி தன் தூய்மையான இயல்பை இழந்ததாக மிகவும் வருந்தி, இத்தலத்தில் தவம் இருந்தாள். விஷ்ணுவும் வைகுண்டத்தில் வீற்றிருப்பது போலவே இங்கும் வைகுண்ட விமானத்தில் ஆனந்தமயமாக பூமாதேவிக்கு காட்சி கொடுத்ததாக தலவரலாறு கூறுகிறது.

இத்தலம் நான்கு ஏரிகளில் சூழ பட்டதால் நாங்குநேரி எனஆனது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக ராஜ தர்பார் கோலத்தில் அரசராக அமைந்திருப்பது இத்தலத்தில் மட்டுமே.

பெருமாளின் கையில் பிரத்யேக சக்கரம் உள்ளது. இதை பார்ப்பவர்களுக்கு எதிரிகள் இருக்கமாட்டார்கள் என சொல்லப்படுகிறது. இத்தலத்திலுள்ள தாயாரின் உற்சவர் சிலை முதலில் திருப்பதியில் தான் இருந்ததாம், அங்குள்ளவர்கள் திருவேங்கட பெருமாளுக்கு ஸ்ரீ வரமங்காதேவியை திருமணம் செய்ய இருந்தனர், அப்போது பெரிய ஜீயரின் கனவில் தோன்றிய பெருமாள், “இவள் நாங்குநேரியில் உள்ள வானமாமலை பெருமாளுக்காக இருப்பவள்,” என கூறியதால் இத்தலத்தில் வந்து விட்டாள் என சொல்லப்படுகிறது.

இத்தலத்தில் ஆண்டு முழுவதும் பெருமாளுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் நடக்கும். இந்த எண்ணெயை ஒரு கிணற்றில் ஊற்றி வைப்பார்கள். தோல் வியாதி உள்ளவர்கள் இந்த எண்ணையை உடலில் தேய்த்து, சில சொட்டுக்கள் சாப்பிட்டால் குணமாகி விடும் என்பது நம்பிக்கை.

இக்கோயிலின் ராஜகோபுரம் உயர்ந்தோங்கி கம்பீரமாக உள்ளது. கோயிலின் உட்புறம் மண்டபமும் அதனை அடுத்து பெரிய மண்டபமும் உள்ளது. இங்கு தங்கரதம், தங்க சப்பரம் ஆகியன இருப்பதை காணலாம்.

பங்குனி உத்திரத்தன்று தங்கத்தேர் இழுக்கப்படும். செவ்வந்தி நாயகர்கள் செய்துள்ள தெய்வத்திருபணிகளில் இதுவும் ஒன்று. வீரப்ப நாயக்கர் மண்டபம் கண்டுகளிக்க வேண்டிய ஒன்று.

அற்புதமான சிற்பங்கள் கலை பொக்கிஷங்களாக திகழ்கின்றன. இந்த கலை கூடத்திற்கு அருகில் லட்சுமி வராகர், லட்சுமி நாராயணர், வேணுகோபாலன், மச்ச முதல் கல்கி வரையிலான தசாவதாரம் மூர்த்திகளுக்கு தனிச் சன்னதிகள் உள்ளது.

ஒவ்வொரு தலத்திலும் ஒரு சுயம்பு மூர்த்தி தான் இருக்கும், ஆனால் இத்தலத்தில் மூலஸ்தானத்தில் உள்ள தோத்தாத்திரிநாதர், ஸ்ரீ தேவி, பூதேவி, சூரியன், சந்திரன், பிருகுரிஷி, மார்கண்டேயர், ஊர்வசி, திலோத்தமை ஆகிய ஒன்பது பேரும் அர்த்த மண்டபத்தில் உள்ள கருடாழ்வாரும், விஷ்வக்சேனர் ஆகிய பதினோரு பேர் சுயம்பு மூர்த்திகளாக உள்ளனர். இத்தகைய அமைப்பு இங்கு மட்டுமே உள்ளது. இத்தல பெருமாளை ஆண்டுமுழுவதும் தரிசிக்கலாம்.

Recent Post