வெட்பாலை இலையின் மருத்துவ குணங்கள்

வெட்பாலை இலையை அரைத்து பசும்பாலில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் 3 நாட்கள் உடல் கொள்ள கரப்பான் வண்டுக்கடி குணமாகும்.

வெட்பாலை இலையை வாயில் போட்டு மென்று சுவைக்க பல்வலி குணமாகும்.

வெட்பாலை அரிசி (விதை) பொடி செய்து முதல் 2 கிராம் அளவு வெந்நீரில் கலந்து உட்கொள்ள வயிற்றுப் பொருமல் குணமாகும்.

வெட்பாலை பட்டை ஒன்றிரண்டாக இடித்து நீர்விட்டு 1/4 பங்காய் காய்ச்சி வடிகட்டி குடித்து வர சுரத்தை குணமாக்கும். பசியைத் தூண்டும். உடலுக்கு வலிமை தரும்.

வெட்பாலைப் பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கூட்டு செய்து உட்கொண்டு வர வயிற்றுப்புண் குணமாகும். மலச்சிக்கலைப் போக்கும்.

வெட்பாலை அரிசி, வெட்பாலை பட்டை கோரைக்கிழங்கு, சந்தனம், அதிமதுரம், மஞ்சள் இவற்றை சம அளவு எடுத்து இடித்து, நீர்விட்டுக் காய்ச்சி வடிகட்டி குடித்து வர மந்தம், செரியாமை பிரச்சினைகள் குணமாகும்.

வெட்பாலை அரிசி, பொங்கல் பூ புளியம்பூ வசம்பு, பூண்டு, சீரகம், நன்னாரி – இவை வகைக்கு 5 கிராம் எடுத்து, சிறிது பால்விட்டு அரைத்து 100 மில்லி பால், 200 மில்லி எண்ணெய் இவற்றில் கலந்து காய்ச்சி 4 மில்லி அளவு உட்கொள்ள கரப்பான் குணமாகும்.

வெட்பாலை இலை, தேங்காய் எண்ணெய் சம அளவு எடுத்துக் கொள்ளவும். வெட்பாலை இலைகளை சிறியதாக அரிந்து தேங்காய் எண்ணெயில் கலந்து, அதை வாய் அகன்ற பாத்திரத்தில் வைத்து சூரிய ஒளியில் வைக்கவும்.

4 முதல் 5 நாட்கள் சென்ற பின் இலைகளை அழுத்திப்பிழிய கருநீல செந்நிறமாக தைலம் இறங்கும். இந்தத் தைலம் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பசும் பாலுடன் கலந்து 2 வேளை உட்கொண்டு வெளியிலும் பூசிவர ‘சோரியாஸிஸ்’ எனப்படும் செதில் உதிர் படை நோய் நீங்கும்.

வெட்பாலை இலையை அரைத்து சாப்பிட்டு சுடு நீர் பருகினாலும், வெட்பாலை வேரை அரைத்து பாக்கு அளவு எடுத்து ஆட்டுப்பாலில் உட்கொண்டாலும் குடல் பிரட்டு, குடல் வாதம் ஆகியவை 3 நாட்களில் குணமாகும்.

வெட்பாலை அரிசி, மஞ்சள், மரமஞ்சள், மிளகு, இந்துப்பு – இவை சம அளவு எடுத்து பொடித்து, அதனுடன் சிறிது பச்சைக் கற்பூரம் சேர்த்து வெந்நீர் விட்டு அரைத்து உட்கொள்ள தொண்டை புண் குணமாகும்.

வெட்பாலை அரிசி, மஞ்சள், தூதுவளை வேர் பட்டை மரமஞ்சள் – இவை சம அளவு எடுத்து பொடி செய்து நீர்விட்டுக் காய்ச்சி வடிகட்டி உட்கொள்ளக் கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் சுரம், வாந்தி, பேதி ஆகியவை குணமாகும்.

வெட்பாலை பட்டை 2 பங்கு, ஆவாரை வேர் ஒரு பங்கு, பூலா வேர் 1/2 பங்கு எடுத்து இடித்துக் கொள்ள வும். அதை 8 பங்கு நீரிலிட்டு ஒரு பங்காய் வற்ற காய்ச்சி அதனுடன் சம அளவு நல்லெண்ணெயைக் கூட்டி நன்கு காய்ச்சிக் கொள்ளவும். இந்த எண்ணெயை ஒரு துணியில் நனைத்து பிளவை, புண்கள் இவற்றின் மேலே போட்டு வர அவை விரைவில் குணமாகும்.

வெட்பாலை பட்டை, திப்பிலி, சுரை விதை, சீரகம், கருஞ்சீரகம், நேர்வாளம், வெடியுப்பு, சுண்ணம் இவற்றை சம அளவு எடுத்து கற்றாழை, பருத்தி இலை இவற்றின் சாற்றுடன் நன்கு அரைத்து சுண்டைக்காய் அளவு உருட்டி உலர்த்திக் கொள்ளவும் இதை சிறுநீரைப் பெருகச் செய்யும் குடிநீருடன் உட்கொள்ள கல்லடைப்பு சதையடைப்பு, நீர்க்கட்டு ஆகிய பிரச்சினைகள் குணமாகும்.

உளுந்து நீர் விட்டுக் காய்ச்சி குடி நீர், எண்ணெய் வெள்ளாட்டுப் பால் சம அளவு எடுத்து, அதில் வெட் பாலை பட்டை பூனைக்காலி விதை, வசம்பு, இந்துப்பு,இவற்றை வெள்ளாட்டுப்பாலுடன் அரைத்து சேர்த்துக் காய்ச்சி வடித்துக் கொள்ளவும்.

இந்த மருந்தை 10 நாட்கள் நெல்லுக்குள் புதைத்து வைத்து பின்னர் பூசி வர கை கால் நடுங்குவது குணமாகும். இதைக் கொண்டு தொடர்ந்து தலைக்கு குளிக்க பயன்படுத்தி வர, உள்நாக்கு வளர்ச்சி, காது மந்தம் ஆகிய பிரச்சனைகள் குணமாகும்

வெட்பாலை அரிசி, இலவம் பிசின், காட்டாத்திப் பூ வில்வப் பழச்சதை, கோரைக்கிழங்கு, பாச்சோத்திப் பட்டை சம அளவு எடுத்துப் பொடி செய்து 1 முதல் 2 கிராம் மோரில் உட்கொள்ள சீதக்கழிச்சல், ரத்தக் கழிச்சல் குணமாகும்.

வெட்பாலை பட்டை, சுக்கு சமஅளவு எடுத்து கஷாயமிட்டு குடித்து வர ரத்த மூலம் குணமாகும்.

Recent Post

RELATED POST