வேட்டை நாய் திரை விமர்சனம்

ஆர் கே சுரேஷ், ராம்கி, சுபிக்‌ஷா, நமோ நாராயணா ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஜெய் சங்கர் இப்படத்தை இயக்கியுள்ளார்.

ராம்கி ஒரு சில அடியாட்களை வைத்துக்கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்து வருகிறார். இவருடைய அடியாட்களில் ஒருவர் தான் ஆர்கே சுரேஷ். ராம்கி கண்ணசைத்தாலே போதும். எதிரில் எத்தனை பேர் இருந்தாலும் அடித்து பறக்க விடுவார் ஆர்கே சுரேஷ்.

அப்படிப்பட்ட ஆர்கே சுரேஷை மது கொடுத்து தனது கட்டுப்பாட்டிலேயே வைக்கிறார் ராம்கி. இந்நிலையில் நாயகி சுபிக்ஷா மீது ஆர்கே சுரேசுக்கு காதல் ஏற்படுகிறது. சுபிக்ஷாவின் விருப்பம் இல்லாமல் அவரை திருமணம் செய்து கொள்கிறார்.

Advertisement

பிறகு கணவனே கண்கண்ட தெய்வம் என்றபடி சுபிக்ஷா ஆர்கே சுரேஷிடம் வாழ ஆரம்பிக்கிறார். ராம்கியிடம் ஆர்கே சுரேஷ் அடியாளாக வேலை பார்ப்பது அவருடைய மனைவியை சுபிக்ஷாவுக்கு பிடிக்கவில்லை. இதனால் மனம் திருந்தி வேறு வேலை பார்க்க ஆரம்பிக்கிறார் ஆர்கே சுரேஷ்.

ஆர்கே சுரேஷ் முன் செய்த பாவங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து அவரைத் துரத்த ஆரம்பிக்கிறது. அதன்பிறகு அவருடைய வாழ்க்கை என்னவானது என்பது தான் படத்தின் கதை.

vettai naai cinema vimarsanam

படத்தில் புதிதாக சொல்வதற்கு எதுவும் இல்லை. ஏற்கனவே பல முறை பார்த்த படங்களின் காட்சிகள் நினைவுக்கு வந்து போகின்றன. ஆர்கே சுரேஷ் முரட்டுத்தனமான வில்லனாக பார்த்த நமக்கு அவரை ஹீரோவாக ஏற்றுக்கொள்ள முடியாமல் போகிறது.

கட்டப்பஞ்சாயத்து செய்து வரும் ராம்கியின் நடிப்பு செயற்கையாக உள்ளது. 80களில் நடித்ததைப் போலவே இந்தப் படத்திலும் நடிப்பது தெரியும்படி நடித்திருக்கிறார்.

படத்தின் ஒரே ஆறுதல் நாயகி சுபிக்‌ஷா மட்டுமே. பள்ளி மாணவி மற்றும் திருமண ஆன ஒரு பெண் என இரண்டையும் நேர்த்தியாக செய்திருக்கிறார்.

க்ளைமாக்ஸ் காட்சியில் பெண்களுக்காக வைத்திருந்த செண்டிமெண்ட் ரசிக்கும்படி உள்ளது. கதையில் கொஞ்சம் அக்கறை செலுத்தியிருந்தால் வேட்டை நாய் வெற்றி பாதையில் ஓடியிருக்கும்.

வேட்டை நாய் – வேகம் இல்லை