புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் திருக்கோவில்களில் முக்கியமானது விராலிமலை முருகன் கோவில். திருச்சியிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலும், புதுக்கோட்டைக்கு வடமேற்காக சுமார் 40 கிலோமீட்டரிலும் விராலிமலை அமைந்துள்ளது.
இங்கு முருகப்பெருமானுக்கு பாலும், பழமும், பஞ்சாமிர்தம் நைவேத்தியமாக செய்யப்படுகிறது. இங்குள்ள முருகப் பெருமானுக்கு உச்சிகால வழிபாட்டின்போது சுருட்டு நைவேத்தியம் செய்யப்படுகிறது. இந்தக் கோவிலில் ஆறுமுகப் பெருமான், மயில் மீது வீற்றிருக்கிறார். இது தெற்கு பார்த்த மயில் என்பதால் இதற்கு “அசுர மயில்” என்று பெயர்.
தட்சணாமூர்த்தியின் சிலை அருகே ஜனகர், ஜனந்தர், ஜனாதனர், ஜனத்குமாரர் ஆகிய நான்கு முனிவர்களின் சிலையை அருகே காணலாம். இந்த முனிவர்களுக்கு குருபகவான் உபதேசம் செய்வதாக கூறப்படுகிறது.
விராலிமலை முருகன் கோவில் அமைந்துள்ள இடத்தில், ஒரு காலத்தில் “குரா” என்ற மரம் இருந்தது. ஒரு வேடன் ஒரு புலியை விரட்டி வந்த போது, குரா மரம் இருந்த இடத்தில் புலி காணாமல் போக, அந்த இடத்தில் தெய்வ சக்தி இருப்பதாக வேடன் கருதினான். அதன் பிறகு அங்கேயே இருந்து முருகனை வழிபடத் துவங்கினான். அங்கு வந்த முருகன் அவருக்கு அருள் பாலித்தார். சண்முகநாதன் என்ற பெயரில் அங்கேயே தங்கினார். திருப்புகழில் 18 இடங்களில், விராலிமலை பற்றி அருணகிரிநாதர் பாடியிருக்கிறார்.
மலைக்கு செல்லும் வழியில் “சந்தன கோட்டம்” என்னும் மண்டபத்தில் ஆறுமுகப் பெருமான் காட்சியளிக்கிறார். மேலும் இடும்பன் சன்னதி, பாறையில் குடைந்து அமைக்கப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னதியும் அமைந்துள்ளன.
பங்குனி உத்திரம், கந்த சஷ்டி ஆகியவை இத்தலத்தின் சிறப்பான உற்சவங்கள்.நோய் மற்றும் துன்பங்கள் நீங்க, கல்வி, செல்வம், மற்றும் ஆயுள் நீடிக்கவும் இங்குள்ள முருகனாரை வேண்டிச் செல்வர்.