ஒரே காலில் நின்று கொண்டு செய்வதால் இதற்கு ஏக பாத ஆசனம் என்று பெயர் பெற்றுள்ளது.
இடது காலை தரையில் நன்றாக ஊன்றிக்கொண்டு, வலது காலை மடித்து இடது முழங்கால் மேல் பாதம் படும் படியாக நின்று கொள்ள வேண்டும். இரு கைகளையும் மெல்ல மெல்ல தலைக்கு மேல் தூக்கி கூப்பிய வண்ணம் வைக்கவும். பார்வை நேராக இருக்க வேண்டும்.
மூச்சுக்காற்றை உள்ளே இழுத்தவாறு இருகைகளின் பெருவிரல்கள் ஒன்றை ஒன்று தொட்டவாறு நிலத்திற்கு இணையாக இருக்குமாறு வைக்கவும். இதை செய்யும் பொழுது மூச்சை நன்றாக இழுத்து விடவும். இதே போல் 20 வினாடிகள் தொடர்ந்து செய்ய வேண்டும்.
பிறகு வலது காலை கீழே ஊன்றி, இடது காலை மடித்து வலது கால் முழங்கால் மேல் படும்படி வைக்க வேண்டும். கைகள் மேலே கூப்பிய வண்ணம் இருக்க வேண்டும். 20 வினாடிகள் கழித்து மெல்ல மெல்ல மூச்சை விட்டுக்கொண்டு காலை எடுக்கவும்.
இந்த ஆசனத்தை இடது, வலது கால் மாற்றி வைத்து செய்யவும். இரண்டு பக்கமும் சேர்த்து 3/5 முறை செய்யவும்.
முழங்கால் வலி உள்ளவர்கள் இந்த ஆசனம் செய்வதால் முழங்கால் நன்றாக வளைந்து கொடுக்கும். உடலில் உள்ள ரத்த ஓட்டம் சீராக இருக்க இந்த ஆசனம் பயன்படுகிறது. கணையத்தில் ஹார்மோன் சுரக்க இந்த ஆசனம் உதவுகிறது.