எந்த முறையில் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும், நடைபயிற்சி செய்யும்போது, எந்த வித விஷயங்களையெல்லாம் செய்யக்கூடாது என்பது தொடர்பான தகவல்கள் பற்றி விளக்கமாக பார்க்கலாம்.
நடைபயிற்சி என்பது மிகவும் எளிய உடற்பயிற்சிகளில் ஒன்றாகும். எந்த வயதினரும், எந்த நிலையிலும், இந்த பயிற்சியை எளிமையாக செய்ய முடியும். அதற்கான ஆயத்த பணிகள் என்பது ஒன்றுமே இல்லையென்று தான் சொல்ல வேண்டும். இவ்வாறு இருக்கும் இந்த உடற்பயிற்சியை சரியான வழிமுறைகளோடு செய்தால், உடல் எடை நிச்சயமாக குறைக்க முடியும் என்று உடற்பயிற்சி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆரம்பத்தில் கூறியது போலவே, நடைபயிற்சி செய்வது என்பது எளிமையான உடற்பயிற்சி ஆகும். இதனை மேற்கொள்ளும்போது, அதிக அளவு கலோரிகள் குறைக்கப்படாது. எனவே, 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை, வாக்கிங் செல்லுங்கள். ஆரம்பத்தில், 30 நிமிடங்கள் மட்டுமே வாக்கிங் செய்யுங்கள். பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக நடைபயிற்சி செய்யும் நேரத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள்.
காலை மட்டுமே நான் வாக்கிங் செல்வேன். வேறு ஏதேனும் வீட்டின் அருகில் இருக்கும் கடைகள் அனைத்திற்கும், பைக்கிலேயே செல்வேன் என்று இருந்தால், உங்கள் எடை குறையாது. எனவே, முடிந்த அளவிற்கு, நடந்து அனைத்து இடத்திற்கும் செல்ல முயற்சி செய்யுங்கள். பொதுவாக காலை நேரங்களில், சூரிய ஒளி உடலில் படும் வகையில், வாக்கிங் சென்றால், கூடுதல் நலன் பயக்கும்.
காலை உணவு சாப்பிடுவதற்கு முன்னர், வாக்கிங் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். காரணம் என்னவென்றால், அப்போது நம் உடலில் கலோரிகளின் அளவு மிகவும் குறைவாகவே இருக்கும். எனவே, அந்த சமயங்களில், உடலில் உள்ள கொழுப்புகள் விரைவில் கரையும்.
வாக்கிங் செல்லும்போது மேல் கைகளை நன்கு அசைத்து நடக்கவேண்டும். அப்படி நடந்தால் வழக்கத்தை விட 5 முதல் 10 சதவீதம் அதிகமான ஆற்றல் செலவழியும். நடக்கும்போது கைகளை செங்குத்தாக மடக்கி, தோள்பட்டையிலிருந்து முன்பக்கமாக தள்ளி பின்னர் இழுத்து நடக்கவும்..
நடைபயிற்சி மட்டுமில்லை, வேறு எந்தவொரு பயிற்சியை நீங்கள் மேற்கொண்டாலும், உணவுப் பழக்கத்தில் கட்டுக்கோப்பாக இல்லாவிட்டால், மொத்தமும் வீண் தான். எனவே, ஆரோக்கியமான, கலோரிகள் குறைந்த உணவுப் பொருட்களை சாப்பிட்டு உடல் எடையை குறைக்க முயற்சி செய்யுங்கள்.