நிலச்சரிவு என்றால் என்ன? எப்படி ஏற்படுகிறது?

நிலச்சரிவு என்பது பாறைகள், மண் பொருள்கள், குப்பைகள் போன்றவை திடீரென நகர்ந்து ஏற்படுகின்ற ஒரு புவியியல் நிழ்வாகும். நேபாளம், இந்தோனேசியா, பப்புவா நியூ கினி ஆகிய நாடுகளில் இந்நிகழ்வு அடிக்கடி ஏற்படுகிறது.

தொடர்ந்து மழை பெய்வது, கடுமையான நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை காரணங்கள் அல்லது அதிக கட்டுமானம், காடுகள் அழிப்பு மற்றும் பயிர் முறைகளில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற மனிதனால் உருவாக்கப்பட்ட காரணிகளால் நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன.

நிலச்சரிவுக்கான பல காரணங்களில் தண்ணீர் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. ஏற்கனவே உறுதியற்ற தன்மையை எதிர்கொள்ளும் மண் மீது தண்ணீர் அழுத்தம் கொடுக்கும்போது மண் மேலும் வலுவிழக்கும். இதன் காரணமாகவும் நிலச்சரிவு ஏற்படும்.

புவியியல் காரணம் என்று பார்க்கும்போது, ஓரிடத்தில் இருக்கும் மணற்பரப்பு, பாறை போன்றவை வலுவிழப்பது, பாறைத்தட்டுகள் பலவீனப்படுவது போன்றவற்றைக் குறிக்கும்.

ஓரிடத்தில் ஆழ வேறூன்றும் மரங்கள் இல்லாத சமயத்தில், பூமிப்பரப்பு மிகவும் இளகுவாக இருக்கும்போது நிலச்சரிவு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. அதுவும், அதிக மழைப்பொழிவு போன்றவை எளிதில் நிலச்சரிவுக்கு வழிவகுக்கின்றன.

இந்தியாவில் நிலச்சரிவு ஏற்படக்கூடிய முக்கிய பகுதிகள்

வடகிழக்கு பகுதி ( இந்தியாவில் நிலச்சரிவு ஏற்படக்கூடிய மொத்த பகுதிகளில் 50 சதவீதத்தை உள்ளடக்கியது )

இமயமலையை ஒட்டி அமைந்துள்ள உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் பகுதிகள்.

மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ளன.

கிழக்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய ஆந்திராவில் அரக்கு பகுதி.

Recent Post